கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு இரண்டு முறையும், சபாநாயகருக்கு ஒரு முறையும் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் கடிதத்தை ஏற்று சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாததால், கர்நாடக அரசை ஆளுநர் கலைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் கடைசியாக கர்நாடக சட்டப்பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறிய நிலையில், அதை ஆளும் கட்சியும், சபாநாயகரும் ஏற்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் முடியாததால், வாக்கெடுப்பு நடத்த முடியாது என கூறி சபாநாயகர் வரும் திங்கள்கிழமைக்கு அவையை ஒத்திவைத்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இரவு 12.00 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று சபாநாயகரை வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் எடியூரப்பா விடுத்த கோரிக்கையை ஏற்காமல், திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவையை ஒத்திவைத்தார்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வழக்கு, ஆளுநர் கடிதத்திற்கு எதிராக முதல்வர் குமாரசாமி ஒரு வழக்கு, சபாநாயகர் ஒரு வழக்கு, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கு உட்பட உச்சநீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்குகளை காரணமாக வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க முதல்வர் குமாரசாமி பாஜகவுக்கு எதிராக புது வியூகம் வகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆளும் கட்சிக்கு அழுத்தம் தரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.