இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தநிலையில், இந்த தேர்வின்போது தங்களுக்குத் தவறான வரிசை எண் கொண்ட வினா மற்றும் விடைத்தாள்கள் தரப்பட்டதாக இரண்டு மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், இரண்டு மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்துமாறும், அதுவரை இளங்கலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று (28.10.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், 6 மாணவர்கள் இதே பிரசச்னையை (தவறான வினா மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்பட்டது) சந்தித்தனர். மற்ற நால்வரும் முழுமையாக தேர்வு எழுதினர். இவர்கள் மட்டும் முழுமையாக எழுதாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர், மற்ற நால்வரும் ஆணையங்கள் செய்த தவறை உணரவில்லை. இந்த இரு மாணவர்களும் அதை உணர்ந்துகொண்டார்கள். மேலும், அவர்களுக்கு தங்களது விடைகள் தவறாக மதிப்பிடப்படும் என்பது தெரியும் என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதித்து, இளங்கலை நீட் தேர்வு முடிவை வெளியிட அனுமதியளித்தனர். மேலும், இந்த இரு மாணவர்களுக்கு என்ன செய்வது என பார்ப்போம் எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
இதனால் இளங்கலை நீட் தேர்வு முடிவுகள், இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.