சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றினால் 1,09,400 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3800 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆக இருந்தது.
இதற்கிடையில் கர்நாடகாவின் கலபுரகியில் முகமது ஹுசைன் சித்தின் என்ற 76 வயது முதியவர் நேற்று முன்தினம் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். அவர் கரோனாவால் உயிரிழந்ததாக அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது . முடிவுகள் வந்த பிறகே கரோனாவால் இறந்தாரா என்பது குறித்து தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த இரத்த மாதிரிகளின் சோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்த முடிவுகள் முதியவர் கரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்ததை உறுதிபடுத்தியுள்ளது. இது இந்திய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அம்மாநில அரசும் இதை உறுதி செய்துள்ளது.