திரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கோரி அம்மாநில முதல்வர் மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகங்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பெலோனியாவில் இருந்த ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. தலைமையிலான அரசு இன்னமும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே இம்மாதிரியான தாக்குதல்கள் அங்கு தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில ஆளுநர் ததகட்டா ராய் மற்றும் டி.ஜி.பி. சுக்லா ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து, புதிய அரசு அங்கு ஆட்சியமைக்கும் வரை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் மற்றும் மாநிலத்தில் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.