
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பாஜகவும், எப்படியாவது இழந்த ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸும் படுத்தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் தலைவர்கள் பேசுவது சர்ச்சையாகியும் வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றவே, “நான் பிரதமர் மோடியை விமர்சிக்கவில்லை. பாஜகவைத்தான் விமர்சித்தேன். அப்படி என் கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்றார் மல்லிகார்ஜூன கார்கே.
இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான பசனகௌடா பாட்டீல் யாத்னால் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை விஷப்பெண் என்று பேசியுள்ளது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
பொப்பள் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பசனகௌடா பாட்டீல் யாத்னால், “உலகமே பிரதமர் மோடியைப் பாராட்டுகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. ஆனால், இன்று உலகத் தலைவராக உயர்ந்து நிற்கும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால், அவரை விஷப்பாம்புடன் ஒப்பிடுகிறார்கள். இதெல்லாம் சோனியா காந்தியின் அறிவுறுத்தல் பெயரால் நடைபெறுகிறது. நாட்டைச் சீரழித்தவர் சோனியா காந்தி. அவர் விஷப்பெண்ணா? சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு சோனியா காந்தி ஏஜெண்டாக செயல்படுகிறார்” என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக தங்களது கண்டனத்தை முன்வைத்து வருகின்றனர்.