தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளன.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான கபில் சிபல், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது குறித்து ட்விட்டரில், "புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையைக் காட்டுகிறது என்று அமித்ஷா கூறுகிறார். வாழ்த்துகள். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, டிஜிட்டல் பிளவு, சுகாதாரம் மற்றும் கல்வி துறையில் காணப்படும் பற்றாக்குறை, பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான துயரங்கள் ஆகியவற்றில் மோடியின் தொலைநோக்கு பார்வை என்ன? பாராளுமன்றம் கட்டப்பட்ட வேகத்தில் இந்த பிரச்சனைகளும் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.