வெளிநாட்டில் பதுங்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி ஒன்றிற்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்திருப்பதாகவும் அதை வைத்தே அவர் வெளிநாடுகளுக்கு சென்றதாகவும் வந்த குற்றசாட்டை தொடர்ந்து அவரிடம் ஒன்றிற்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் இல்லை எனவும் அவர் ஆறு பாஸ்போர்ட்கள் வைத்திருக்கிறார் என்பது பொய்யான தகவல் என இந்திய வெளியுறவு செயலர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல வைர நகை வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து திரும்ப செலுத்தாமல் சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.
இந்த மோசடி குறித்து சிபிஐ அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. அதேபோல் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மற்றும் அவர் உறவினர் மெகுல் இருவரையும் இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை பிடிக்க உத்தரவிடும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது
இதனை அடுத்து வைர வியாபாரி நிரவ் மோடியிடம் ஆறு பாஸ்போர்ட்கள் இருப்பதாகவும் அதைவைத்துதான் அவர் பல நாடுகளுக்கு எளிதில் தப்பித்து தலைமறைவாகி வருகிறார் என செய்திகள் ஊடங்களில் வெளிவந்தது. இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவு துறை செயலர் ரவீஷ் குமார், இந்த தகவல் முற்றிலும் போலியானது. அவரிடம் ஒன்றிற்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு முறையும் பழைய பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டு புதிய பாஸ்போர்ட்டை அவர் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.