
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் ஏப்ரல் ஒன்றாம் தேதி (இன்று) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் சுங்கக்கட்டணத்தின் அளவு ஒவ்வொரு வகை வாகனங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக 38 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வெளியான அறிவிப்பின் படி ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று (01/04/2025) முதல் தமிழ்நாட்டில் உள்ள வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டண உயர்வு நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.