பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வானார். இதை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு பூங்கோத்து வழங்கி வாழ்த்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதேபோல் பல்வேறு மாநில பாஜக தலைவர்களும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் ஜெ.பி நட்டாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா குறித்த பின்னணியை பார்ப்போம். ஜெ.பி.நட்டா பீகார் மாநிலம் பாட்னாவில் 1960- ஆம் ஆண்டு டிசம்பர்-2 ஆம் தேதி பிறந்தார். பள்ளி படிப்பை பாட்னாவில் முடித்த நட்டா இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். முதன்முதலாக இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக 1993- ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012- ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரான நட்டா, 2014- ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானார்.
பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டாவுக்கு மல்லிகா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.