கடந்த திங்களன்று (19 பிப்ரவரி) டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் போலீசார் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களான பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லாகான் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆலோசனை கூட்டம் நடந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று 60க்கும் மேற்பட்ட போலீசார்கள் தீவிரசோதனையில் ஈடுபட்டனர். அங்கு பொருத்தபட்டிருந்த 21 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி கூடுதல் துணை ஆணையர் ஹரேந்திர சிங் கூறுகையில், இந்த சோதனை பற்றி ஏற்கனவே முதல்வர் இல்லத்திற்கு தகவல் தெரிவித்திருந்தோம். தலைமை செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நாளான 20ஆம் தேதியன்று பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டிருந்தோம். அதை அவர்கள் தர மறுத்ததால் போலீசார் அனுப்பப்பட்டனர்.
டெல்லி முதல்வர் ட்விட்டரில் பக்கத்தில் இதைப்பற்றி குறிப்பிடுகையில், 'எனது இல்லத்துக்கு அதிக அளவில் போலீசார் அனுப்பப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிபதி லோயா மரண வழக்கில் அமித்ஷாவிடம் எப்போது விசாரணை நடத்துவார்கள்? இதே ஆர்வத்தையும் அவசரத்தையும் எப்போது அங்கே காட்டுவார்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.