நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பள்ளித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூரி தேர்வுகளும் ஒடிசா போன்ற போன்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சில மாநிலங்களில் அதற்கு தடை விதிக்கப்பட்டு, பிறகு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஆன் லைன் வகுப்புகள் கட்டற்று செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் குழந்தைகள் நல அமைப்புகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய அரசு தற்போது விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என்றும் மத்திய அரசு தன்னுடைய விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.