ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர், தான் வன்புணர்வு செய்யப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதிர்ச்சி தரும் இந்தத் தகவல்கள் நாட்டில் பெண்கள் மீதான பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் கோடை விடுமுறையைக் கழிக்க இமாச்சல்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணாலியில் தங்கியிருந்த அவர் கடந்த மே 30ஆம் தேதி, மாலை நேரம் குலு பகுதிக்கு செல்வதறாக டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார்.
அன்று இரவு டாக்ஸி மூலம் அந்தப்பெண்ணை அழைத்துச்சென்ற டாக்ஸி ஓட்டுநர் தீபக் (வயது 37), வனப்பகுதிக்குள் அவரை கூட்டிச்சென்று வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளான். அதைத் தடுக்க அந்தப்பெண் முயற்சித்தபோது, கூடுதலாக சில ஆட்களை வரவழைக்க நேரிடும் என மிரட்டியுள்ளான். ஒருவேளை இதற்கு ஒத்துழைக்காவிட்டால், டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு நேர்ந்ததுபோல், தனக்கும் ஆகிவிடுமோ என்று அஞ்சிய அந்தப்பெண், வேறுவழியின்றி அந்தக் கொடுமையை அனுபவித்துள்ளார்.
காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியான தீபக் கைது செய்யப்பட்டுள்ளான். 2012ஆம் ஆண்டு ஆறுபேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் கோரநினைவுகள் இன்னமும் சமூகத்தை வாட்டிவதைப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த செய்தி. பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதில் நம் சமூகச்சூழல் பின்தங்கியிருப்பது ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்படுகிறது.