ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கியும், அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கான மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவியது. மேலும் அந்த மாநிலத்தில் இணைய தள சேவைகள், தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதே சமயம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. மேலும் காஷ்மீர் மாநிலம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 8 முதல் பணிக்கு திரும்ப, அம்மாநில தலைமை செயலாளர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜம்முவில் தொடர்ந்து அமைதி சூழல் மற்றும் இயல்பு நிலைக்கு திரும்புவதால் 144 தடை உத்தரவு நீக்கி, இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு நீடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து ராணுவ கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.