காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இந்த நான்கு மாதங்களில் அங்கு அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவால் மாநிலத்தின் பொருளாதாரம் 17 ஆயிரத்து 878 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்திருக்கிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வர்த்தக அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எந்த பாதி்ப்பும் இல்லை என்று மத்திய அரசும், மோடி மற்றும் அமித்ஷாவும் சொல்லி வரும் நிலையில், காஷ்மீர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பு 2017- 2018 ஆம் ஆண்டு மாநிலத்தின் மொத்த உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையில் 55 சதவீதத்தை உள்ளடக்கிய 10 மாவட்டங்களில் இந்த கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. 120 நாட்களை அளவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கில் 17 ஆயிரத்து 878 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
![jammu kashmir special status removed economic shutdown](http://image.nakkheeran.in/cdn/farfuture/_zkWYxyPgXkV99_P8-eFLrg2lkLT8g1JQgjeIKN2FJ8/1576755492/sites/default/files/inline-images/kashmir4_1.jpg)
மாநிலத்தின் முக்கிய துறைகளையும் அவை சார்ந்த துணைத் துறைகளையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். உதாரணமாக சுற்றுலாத்துறையில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், படகு இல்லங்களின் வருவாய், ஹோட்டல்கள், சுற்றுலா போக்குவரத்து வாகனங்களின் வருவாய், ஷிகாராக்கள், சாகஸ விளையாட்டுகள் உள்ளிட்ட துணைத் துறைகளின் இழப்பும் கணக்கில் கொள்ளப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் கழுதை மற்றும் குதிரை உரிமையாளர்களின் இழப்பு, படகு சவாரி, புகைப்படக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று பல தரப்பினரின் இழப்புகளும் மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால், லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோனது. நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், அதை கட்டமுடியாமல் திவாலகும் நிலை ஏற்பட்டது. அவர்கள் நடத்திய நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.