ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஃபாஹிம் நசீர் ஷா. பகுதி நேர எலக்ட்ரீஷியனான இவர், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக தான் வசிக்கும் ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு இடையேயான 815 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க முடிவு செய்துள்ள இவர், ஏற்கனவே 200 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து உதம்பூர் பகுதி வரை நேற்று வந்துள்ளார்.
இந்த நடைபயணம் குறித்து அவர், "நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன். நான் அவரை (மோடியை) சந்திக்க நடந்தே டெல்லிக்குச் செல்கிறேன். பிரதமரின் கவனத்தை ஈர்ப்பேன் என்று நம்புகிறேன். பிரதமரைச் சந்திப்பது எனது நேசத்துக்குரிய கனவு" எனக் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை சமூகவலைதளங்களில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகப் பின்பற்றுவதாகவும், பிரதமரின் செயல்களும் பேச்சுகளும் தனது இதயத்தைத் தொட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ள ஃபாஹிம் நசீர் ஷா, "ஒரு சமயம் பேரணியில் பேசிக்கொண்டிருக்கும்போது, இஸ்லாமியர்களுக்கான தொழுகைக்கான அழைப்பைக் கேட்டு தனது பேச்சை நிறுத்தி, மக்களை வியப்பில் ஆழ்த்தினார். அந்த செயல் எனது இதயத்தைத் தொட்டுவிட்டது. நான் அவரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன்" எனவும் கூறியுள்ளார்.