உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோன வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மக்கள் அதிகமாக ஒன்று கூட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில்,
இருமல், தும்மல் உள்ள மாணவர்களை கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும். முழுநீள கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான அறிவுரைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதையும், பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முக கவசம் அணிந்து தேர்வு எழுத சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தற்போது சிபிஎஸ்இ இந்த அனுமதியை வழங்கி இருக்கிறது. பொதுத்தேர்வுக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து கொண்டு வரவும், ஹேண்ட் சானிடைசர் கொண்டுவரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.