![jagdish lad passed away due to corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/BQTiaYJtucCFT9ztTDImNjhEWHIFRxBbP5-bAPCzLT8/1619851584/sites/default/files/inline-images/dgfdfg_0.jpg)
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்திய ஆணழகன் பட்டம் வென்றிருந்த ஜகதீஷ் லாட் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சூழலில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டிருந்தாலும், பல இடங்களில் கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துவரும் நிலையில், இந்திய ஆணழகன் பட்டம் வென்றிருந்த ஜகதீஷ் லாட் இத்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பை பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் லாட்(34) உள்ளூர் மற்றும் மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பின்னர், அகில இந்திய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றவர். இவருக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
உலக ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பின்னர், இவர் அரசு வேலைக்கு முயன்றுள்ளார். ஆனால், இவருக்கு அரசு வேலை வழங்கப்படாத நிலையில், பரோடாவில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றை நிர்வகிக்கும் பணியிலிருந்து வந்துள்ளார். ஆனால், லாக்டவுன் காரணமாக ஜிம் மூடப்பட்டதால், குடும்பத்தின் அன்றாட செலவுகளை மேற்கொள்ளவே கஷ்டப்பட்டு வந்துள்ள இவர், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாது அளவு வறுமையில் தவித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், தனது குடும்பத்துடன் வசித்துவந்த இவருக்கு அண்மையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சையிலிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலிருந்து ஆணழகன் போட்டியில் உலகளவில் சாதித்த ஒருவர் வேலையின்றி வறுமையில் துன்பப்பட்டு கரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.