கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக சோனு சூட் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்தநிலையில் சோனு சூட், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகருக்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், சோனு சூட் போலியான நிறுவனங்களிடமிருந்து போலியாக கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.