ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் மேலே ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் உளவு பார்க்கும் வேலை என தெலுங்கு தேச கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் இது குறித்து தனது ட்விட்டரில், "இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஓர் அரசியல் தலைவரின் வீட்டின் மேல் ட்ரோன் கேமரா பறக்க உத்தரவிட்டது யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு உடனடியாக ஆந்திர டிஜிபியிடமே சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர் கூறுகையில், "வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகவே ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் வீடும் இருந்ததாலேயே அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.