
ராஜஸ்தான் மாநிலத்தில் தனது காதலி வீட்டில் இருக்கும்போது, அவரின் பெற்றோரிடம் சிக்கிக்கொண்ட இளைஞர், தன் பெற்றோருக்கு இந்தச் செயல் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என எடுத்த ஒரு முடிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் கா பார் கிராமத்தில் வசித்து வந்த 20 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 4-ம் தேதி இரவு, தனது காதலி வீட்டில் அவரது பெற்றோர் இல்லாதபோது, யாருக்கும் தெரியாமல் தனது காதலியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு ராம் மேக்வால் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அவர் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை ராம் மேக்வாலின் பெற்றோரிடம் கூறப்போவதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன ராம் மேக்வால், அப்பெண்ணின் பெற்றோரிடம் பலமுறை மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த இளைஞர், ஊரில் அனைவர் மத்தியிலும் அவமானமாகிவிடும் என எண்ணி, இரவோடு இரவாக பாகிஸ்தானில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குத் தப்பியுள்ளார்.
அன்றைய தினம் நள்ளிரவே இந்திய எல்லையை ராம் மேக்வால் கடந்திருக்கிறார். மகனைக் காணவில்லை என அறிந்த அவரது பெற்றோர், தங்கள் மகன் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தச் சூழலில், பாகிஸ்தானில் உள்ள அந்த இளைஞரின் உறவினர்கள், அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர்களது மகன் பாகிஸ்தானுக்கு வந்ததையும், அவரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்ததையும் கூறியுள்ளனர். இதையடுத்து, ராம் மேக்வாலை விடுவிக்கும்படி பாகிஸ்தான் பாதுகாப்பு படையிடம் பிஎஸ்எஃப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவமானத்திற்குப் பயந்து இளைஞர் பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.