தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று முன்தினம் (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இதில், 5.06 கோடி வாக்காளர்களையும், 230 சட்டப்பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி காங்கிரஸ் சார்பில் இன்று மத்தியப் பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் (11-10-23) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “இந்த நாட்டில் பட்டியல் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டுபிடிப்பது மிக அவசியம். உடம்பில் ஏதேனும் ஒரு காயம் ஏற்பட்டால், உடனடியாக எக்ஸ்ரே எடுத்து அந்த காயத்தின் தன்மையை பற்றி நாம் அறிகிறோம்.
அதே போல், தான் சாதிவாரி கணக்கெடுப்பும். எக்ஸ்ரே என்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர வேண்டும். அதனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஓ.பி.சி., பட்டியல் சமூகம், பழங்குடியின மக்களின் உரிமைகளை திரும்ப பெற்று தருவோம். ஆனால், பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசாமல் மெளனம் சாதித்து வருகிறார். அவரை அம்பானி, ‘ரிமோட் கண்ட்ரோல்’ போல் இயக்குகிறார்.
மத்திய பிரதேசம் தான், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆய்வுக்கூடமாக இருக்கிறது என்று முன்பு ஒரு முறை எல்.கே. அத்வானி கூறினார். அப்படியான மத்திய பிரதேசத்தில் தான் மக்களின் பணம் கொள்ளை போகிறது. வியாபம் ஊழல், ஆயுஸ்மான் பாரத் ஊழல் போன்ற ஊழல்கள் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் தான் விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்கிறார்கள். பழங்குடியின மக்களின் மீது சிறுநீர் கழிக்கிறார்கள். இவையெல்லாம் தான் அத்வானி கூறிய ஆய்வுக்கூடத்தின் அர்த்தம்” என்று கடுமையாக பேசினார்.