கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கர்நாடக மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், தற்போது எம்.பி.யாக இருக்கும் இவர், ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற ஆபாச வீடியோ நேற்று (19.09.2021) சமூகவலைதளங்களில் வைரலானது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தானல்ல என்றும், அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "என்னுடைய மார்ஃபிங் செய்யப்பட்ட (டீப் ஃபேக்) வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, அப்பழுக்கற்ற எனது பிம்பத்தை சீர்குலைக்கும் வகையில் எனது எதிரிகளால் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் சதானந்த கவுடா, அந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக சதானந்த கவுடா மீது குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஆபாச வீடியோ விவகாரத்தில், எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இராஜினாமா செய்தார். வீடியோவில் இருந்த பெண்ணை, வேலை தருவதாக கூறி ரமேஷ் ஜர்கிஹோலி ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.