டெல்லி சுல்தான்புரி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் உடலில் காயங்களுடன் இளம் பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில் காரில் நான்கு பேர் இருந்ததும் அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தி இருந்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து குறித்து பேசிய டெல்லி லெப்டினண்ட் ஆளுநர், “குற்றவாளிகளின் இந்த கொடூரமான உணர்வு என்னை அதிர்ச்சி கொள்ளச்செய்கிறது. இந்த குற்றத்திற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்” எனக் கூறியுள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் இவ்விவகாரத்தை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இது குறித்து காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “விபத்தில் சிக்கிய இளம்பெண் காருடன் சில கி.மீ இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும். இளம்பெண்ணுக்கு எவ்வாறு நீதி வழங்கப் போகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.