ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான நபர்களின் இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலிருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. வெளியில் தெரியாமல் உள்கட்சி பூசலாக இருந்த வந்த இந்தப் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அம்மாநில முதல்வர் அசோக் கேலாட்டின் வீட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ. க்கள் கலந்துகொண்டு அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் அசோக் கேலாட்டின் நெருங்கிய நண்பரான காங்கிரஸ் தலைவர் தரமேந்தர் ரத்தோரின் வீடு மற்றும் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக நகை நிறுவனத்தின் உரிமையாளர் ராஜீவ் அரோராவின் இடங்கள் ஆகியவற்றில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டெல்லி மற்றும் ராஜஸ்தானில் இவர்கள் இருவருக்கும் சொந்தமான 24 இடங்களில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.