ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த 31 ஆம் தேதி அன்று ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஊர்வலத்தை பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவர் தொடங்கி வைத்தார். அப்போது மேவாட் பகுதியில் ஊர்வலம் சென்ற போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் காவல்துறையினர் வாகனங்கள் உட்பட பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. கலவரத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வீடுகளில் முடங்கினர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கலவரம் ஏற்பட்ட நூ மாவட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று கம்பெனி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வதந்திகள் எதுவும் பரவாமல் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “இரு தரப்பு மோதலில் இரண்டு காவல்துறையினர் உட்பட இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கலவரத்தில் பல பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்தக் கலவரம் தொடர்பாக, காவல்துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே விசாரணை மேற்கொண்டு இதுவரை 116 பேரைக் கைது செய்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. இந்தக் கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். சமூக வலைத்தளங்களில் மூலமாக வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஹரியானா பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை” என்று கூறினார்.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தின் பதிவில் மனோகர் லால் கட்டார், “ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் அனைத்தும் திட்டமிட்ட சதியாகும். சமூக யாத்திரையை சீர்குலைப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சதித்திட்டமாக நூ நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பிக்க மாட்டார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அனுப்பிய பாதுகாப்புப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை அவர்கள்தான் ஈடுகட்ட வேண்டும். அதனால், அனைத்து மக்களிடமும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் நிலைமை சாதாரணமாக இருப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.