மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. மேலும் இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.