தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியே நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க தங்க செங்கோலை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறினார்.
இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்க இருக்கும் நேருவிடம் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபு, இந்தியா சுதந்திரம் அடையும்போது ஆட்சி பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுத்தப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். நேரு நாட்டின் கடைசி கவர்னராக இருந்த ராஜாஜியிடம் இது குறித்து ஆலோசனை கேட்க, அவரோ புதிய அரசன் அரசை ஏற்கும் நாளன்று அவையின் ராஜகுரு செங்கோல் ஒன்றை அவருக்கு கொடுப்பார். இது அதிகாரப் பரிமாற்றத்தைக் கொடுக்கும் எனக் கூறியுள்ளார். சோழர்களின் ஆட்சியில் இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடைகிறது. அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து இருந்து பிரதமருக்கு மாறுகிறது என்பதைக் குறிக்க செங்கோல் ஏற்பாடு செய்யும் பொறுப்பு ராஜாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராஜாஜி இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். அப்போது மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இதை ஏற்றுக்கொண்டார். செங்கோல் தயாரானது. இதன் பின் அந்த செங்கோல் அன்றைய சென்னையிலிருந்த நகைக் கடைக்காரரான வும்மிடி பங்காரு செட்டி என்பவரால் செய்யப்பட்டது. இது ஐந்தடி நீளம் கொண்டது. இதன் தலைப்பகுதியில் நீதியைக் குறிக்கும் 'நந்தி' காளையும் இடம்பெற்றுள்ளது.
ராஜாஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆனதால் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் கொடுத்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார். 1947 ஆகஸ்ட் 15 அன்று இரவு தம்பிரான் பண்டார சுவாமிகள் செங்கோலை மவுண்ட்பேட்டனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதன் பின் செங்கோலுக்கு பூஜை செய்து செங்கோலை நேருவிடம் வழங்கினார்.