முந்தைய காலத்தில் 17 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணம் என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவைக் கலைப்பதற்காக அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், மனுவில் சிறுமிக்கு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அதற்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் ஜே. தாவ், “21 ஆம் நூற்றாண்டில் 17 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது உங்களுக்கு அசாதாரணமாகத் தெரியலாம். ஆனால் முந்தைய காலத்தில் அப்படியில்லை. 15 வயதில் திருமணம் முடிப்பதும், 17 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வதும் சாதாரணமாக நடந்தது. இதைப்பற்றி மனுஸ்மிருதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
மேலும், “கரு உருவாகி 7 மாதத்தைக் கடந்து விட்டதால், இனி கருவைக் கலைத்தால் சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று மருத்துவக் குழுக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், சிறுமியும் கருவில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கருவைக் கலைக்க அனுமதி அளிக்க முடியாது.” என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.