கரோனா தடைகளைத் தாண்டி 13- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று (19/09/2020) தொடங்குகிறது.
56 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
நவம்பர் 3- ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கும், அதன்பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் சுற்றில் மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் அல்லது அரையிறுதிக்கு தகுதி பெறும்.
வார நாட்களில் ஒரு போட்டியும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில் 2 போட்டிகளும் நடக்கின்றன.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் இன்றிரவு 07.30-க்கு தொடங்கும் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை கோப்பை வென்றது. 2019- ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பின், சுமார் ஓராண்டுக்கு பிறகு தோனி களமிறங்கவுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.