புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (23.08.2022) துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
பாகூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துணைநிலை ஆளுநர் உரையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டி பேசுகையில், புதுச்சேரியில் கவர்னருக்கு அதிகாரம் இருக்கும்போது அவருக்கு பொறுப்பும் அதிகம். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு பெற்றுத்தருவதும் அவரது பொறுப்பு. பழைய கடன்களை 30 ஆண்டுகளில் வட்டி இல்லாமல் கட்ட ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என பல்வேறு விஷயங்களை பேசினார்.
பேச்சின் முடிவில் அவர், "பாரதி இருந்திருந்தால், இன்று இப்படித்தான் பாடியிருப்பார்" என கூறி தான் எழுதி வந்த கவிதை ஒன்றை பேரவையில் வாசித்தார்.
" என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.
என்று மடியும் எங்கள் அதிகார இன்மையின் கோலம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் நிதியின்மையின் கோலம்
என்று எம் புதுச்சேரி அன்னையின் கை விலங்குகள் போகும்.
என்று எம் புதுச்சேரி அன்னையின் கை விலங்குகள் போகும்.
என்று எம் இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்.
என்று எம் இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,
என்று மடியும் எங்கள் அடிமையின் கோலம்.
கடனும் வட்டியும் நின் மெய்யடியார்க்கோ
கடனும் வட்டியும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
இரட்டை எஞ்சின் பூட்டிய பின் கைவிடலாமோ?
ஒரே நேர்க்கோட்டில் வந்த பின் கைவிடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ...
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அதிகார இன்மையின் கோலம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் நிதியின்மையின் கோலம்
என்று கவிதை பாடி தற்போது புதுச்சேரியில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். இதற்கு அவையிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.