மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும், வதந்திகளும் காரணம் எனக் கூறி கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் இணைய சேவையை அம்மாநில அரசு முடக்கியது. மேலும், அதில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட எண்களைத் தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைந்து வந்துள்ளதாக அந்த மாநில அரசு உறுதி அளித்தது. ஆனாலும், அங்கு சில இடங்களில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம் தான் இருந்தது. அதில் சில நாட்களுக்கு முன்பு கான்போபி மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதனையடுத்து அடுத்த நாளே, சுராசந்தபூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொண்ட தாக்குதலில் துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் சற்று அமைதி திரும்பி இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறைகள் அரங்கேறின.
இதனையடுத்து மணிப்பூர் முதல்வர் பைரங் சிங், “சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரில் இயல்பு நிலை மற்றும் அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் பைரங் சிங், கலவரத்தால் தடை செய்யப்பட்ட இணைய சேவை இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மாநிலத்தில் கலவரத்தின் போது போலி தகவல்கள் மற்றும் வதந்திகள் இணையத்தில் வேகமாகப் பரவின. எனவே அதனைக் கட்டுப்படுத்த இணைய சேவை துண்டிக்கப்பட்டன. தற்போது இங்கு நிலைமை சீராகி வருவதால் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.