புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் புதுச்சேரியில் 62 நபர்களும், காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒருவர் என மூன்று நபர்கள் என மொத்தம் 65 பேருக்கு கரோனா தோற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "மத்திய அரசு ஊரடங்கு தளர்வு அளித்தாலும்கூட, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது நல்லது. ஊரடங்கு அமல்படுத்தினால் வருவாய் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாது. பொதுமக்களுக்கான நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தளர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் வாரத்தில் ஒருநாள் என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கரோனா பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் பேசி முடிவு செய்யப்படும்.
ஏனாமில் தொற்று ஏற்பட்டு உள்ள 13 பேரில் 11 பேர் அங்குள்ள இறால் பண்ணையில் வேலை செய்தவர்கள். ஏனாம் பிராந்தியம் தூய்மை பணியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஜூலை 1ஆம் தேதி முதல் அங்கு பணிகள் நடைபெறவில்லை. ஊதியத்தை கவர்னர் நிறுத்தியதால் பணியாளர்கள் பணிகளை நிறுத்தியுள்ளனர். ஏதேனும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பு ஆளுநரையே சாரும். கரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் யாருக்கும் ஊதிய பிரச்சனை வரக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. ஏனாமில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு அரசும், கவர்னரும்தான் முழு பொறுப்பு" என்று கூறினார்.
இதனிடையே சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கிரன்பேடி, “புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து அரசு அதிகாரிகள், தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ந்ததில் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் தங்களது இல்லங்களிலிருந்து வெளியே வருகின்றனர். அவர்களால் மற்றவர்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் நோய் தொற்று பரவுகிறது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து அரசு உத்தரவுகளை மீறி வெளியே வருபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். எனவே அவர்கள் பொறுப்புணர்ந்து வீடுகளிலேயே இருக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது, இது பாதிப்பை ஏற்படுத்தும். உள்ளாட்சித்துறை, நகராட்சிகளில் இதை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது செயல்பாட்டை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.