உ.பி.யில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில்
குழந்தைச் சாவுக்கு காரணம் என்ன?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தியநாத் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 மாதங்களில் 1500 குழந்தைகளுக்கு மேல் பலியாகி இருக்கிறார்கள்.
ஆக்சிஜன் பற்றாக்குறையும் சரியான மருத்துவ கட்டமைப்பும் இல்லாததே காரணம் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இதை அரசாங்கம் மறுத்து வருகிறது. உண்மையைச் சொன்ன மருத்துவ அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். தனது சொந்தச் செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கிக் கொடுத்த டாக்டர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
குழந்தைகள் சாவு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதற்கே முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆனால், பத்திரிகைகள் நடத்திய ஆய்வில் குழந்தைகளை பலிகொடு்த்த பெண்கள் மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் ஆகிசிஜன் டியூப்பை எடுத்துவிட்டதாக நர்சுகள் வெளிப்படையாகவே பேசிக் கொள்வதை கேட்டிருப்பதாக ஷகீன் என்ற பெண் தெரிவித்தார்.
மருத்துவமனையில் உயிரிழக்கும் குழந்தைகள் இரவு நேரமானாலும் உடனே எடுத்துச் செல்லும்படி பெற்றோர் நிர்ப்பந்தப் படுத்தப்படுவார்கள். அப்படி எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் தரப்படும். ஆனால், அதற்கு கட்டணமாக ரூ.300 கொடுக்க வேண்டும் என்கிறார் ஷகீன்.
மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் நன்றாக கவனிக்கப்படுவதும், பணம் இல்லாத ஏழைகளின் குழந்தைகள் கொல்லப்படுவதுமாக இருப்பதாக பல பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.