இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பாஜக எம்.பி.யான சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அத்தோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு சுமுக முடிவு எட்டப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்தநிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தங்களது கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதியளித்துள்ளது.