அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, தொடர்ந்து பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுவருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட உள்ளது.
இதனையொட்டி அசாதுதீன் ஓவைசி, அண்மையில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார். இந்தநிலையில் நேற்று (14.09.2021) பீகாரின் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பேசியுள்ளதோடு மத்திய அரசுக்குத் துணிச்சல் இருந்தால் தலிபான்களை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளதாவது, “அரசுக்குத் துணிச்சல் இருந்தால், அது தலிபான்களை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் அட்டவணையில் சேர்க்க வேண்டும். தலிபான்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு கவலையளிக்கக்கூடியதாக மாறலாம் என்றும், அதேநேரத்தில் அது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நன்மை பயக்கலாம் என்றும் நான் 2013 முதல் கூறிவருகிறேன். ஆனால், பாரதிய ஜனதாவுக்கு, அனைத்து முஸ்லிம்களும் தலிபான்கள்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இந்திய அரசு ஒரு மூலோபாய தவறை செய்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்.
உ.பி.யில் 100 இடங்களில் போட்டியிட தயாராக உள்ளோம். இதுவரை எந்த கூட்டணியும் ஏற்படவில்லை. எங்களால் தனியாகவும் போட்டியிட முடியும். நாங்கள் வேறு கட்சிக்கு உதவுவதாக எங்களை நோக்கி விரலை நீட்டுபவர்கள், மக்களவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடாதபோது என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும். பீகாரில், நாங்கள் 19 இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றோம். முஸ்லிம்கள் தங்களின் தகுதியான உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்களது தடத்தை விரிவுபடுத்துகிறோம்.”
இவ்வாறு அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.