கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ள சூழலில், நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைகளும் மே மூன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
இன்று காலை நாட்டு மக்களிடம் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும், ஏப்ரல் 20 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடரும் இந்த ஊரடங்கு, அதன்பின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கரோனா பரவல் நிலையைப் பொருத்து பகுதிவாரியாகத் தளர்த்தப்படலாம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், ப்ரீமியம் ரயில்கள், மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில், கொங்கன் ரயில்வே உள்ளிட்ட இந்திய ரயில்வேயில் செயல்படும் பயணிகள் ரயில் சேவைகள் மே 3 ஆம் தேதி வரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.