நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்துக்கு நிறுவனமாக இருப்பது இந்திய ரயில்வே துறை ஆகும். தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் மத்திய அரசின் வருவாயில் முக்கிய பங்கை ரயில்வே துறை வகிக்கிறது. பயணிகளின் வசதிக்காக பல புது உத்திகளை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. தற்போது, வரலாற்றில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லாம் பிரிவு இதற்கான பரிந்துரையை முன் வைத்துள்ளது. 39 ரயில்களில் மசாஜ் சேவையை தொடங்கலாம் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்த முறையில் முதலில் இதனை செயல்படுத்தலாம் என்றும், மசாஜ் சேவை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ரயில்வே உயர் அதிகாரி ராஜேஷ் பஜ்பாய் தெரிவித்துள்ளார். மசாஜ் சேவைக்கு ரூ.100 முதல் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை பயணிகளுக்காக பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.