2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும்வருகின்றன. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டாலும், இன்னும் இந்தச் சட்டத்திற்கான விதிகள் உருவாக்கப்படவில்லை. இந்த விதிகளை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஏற்கனவே சிலமுறை மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று சட்ட விதிகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவும் கால அவகாசத்தில் நீட்டிப்பு வழங்கிவந்தது.
இந்தச் சூழலில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க மீண்டும் கால அவகாசம் கேட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதிவரை கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரியது. இந்தநிலையில், சட்ட விதிகளுக்கான மக்களவை நிலைக் குழு, குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிவரை நீட்டித்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் உள்துறை இணையமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் குளிர், தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் இறந்தவர்களின் தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் சேகரித்ததா, இறந்தவர்களின் பட்டியலைப் பராமரிக்கிறதா என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், "அதுபோன்ற எந்தத் தகவலும் மத்திய அரசிடம் இல்லை. ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.