Skip to main content

சீனாவின் உதவிகளை பெற வேண்டாம் - உலக நாடுகளை மறைமுகமாக எச்சரித்த இந்தியா!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

EAM JAISHANKAR

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லை பிரச்சனையால், இரு நாடுகளுக்குமிடையேயான உறவு மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை பிரச்சனைக்கு சீனாவே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.

 

இதுதொடர்பாக அவர், ”45 ஆண்டுகளாக எல்லையில் அமைதி நிலவி வந்தது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்து வந்தது. 1975-ல் இருந்து (சீன)எல்லையில் ராணுவத்தினர் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது அது மாறிவிட்டது. இராணுவத்தை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குக் கொண்டு வரக்கூடாது எனச் சீனாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். சீனா அந்த ஒப்பந்தங்களை மீறிவிட்டது. இனி, எல்லையின் நிலையே இரு நாடுகளின் உறவின் நிலையைத் தீர்மானிக்கும். எனவே, தற்போது சீனாவுடனான உறவுகள் கடினமான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

இந்த கூட்டத்தின்போது பார்வையாளர்களில் இருந்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி தேவை என்ற பிரச்சனையை முன்வைத்து அதற்கு சீனா பணம் வழங்குகிறது என்றார்.

 

அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சர்வதேச உறவுகள் போட்டித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு நாடும் வாய்ப்புகளைத் தேடும். தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி யோசிக்கும். ஆனால் அவ்வாறு செய்யும்போது தனக்கு என்ன கிடைக்கும் என்பதையே நாடுகள் சிந்திக்கும். எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் பெரும் கடனில் சிக்கித் தவிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். விமானம் வராத விமான நிலையங்கள், கப்பல் வராத துறைமுகங்கள் என வணிக ரீதியாக நிலைக்க முடியாத திட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். நான் என்ன செய்கிறேன் என்று மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வது நியாயமானதாக இருக்கும். நிலைக்க முடியாத திட்டங்களில் கடன் சமபங்கு ஆகிறது. பிறகு அது வேறொன்று ஆகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.