Skip to main content

பரபரப்பான சூழலில் அக்னி V ஏவுகணையை சோதித்த இந்தியா!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

AGNI 5

 

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில், கடைசியாக இரு நாடுகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

இதனைத்தொடர்ந்து, இருநாடுகளும் விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதேநேரத்தில், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை ஏற்படுத்திவருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியாவும் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நவீன ஆயுதங்களையும் குவித்துள்ளது.

 

இந்தப் பரபரப்பான சூழலில் இந்திய இராணுவத்தின் ஸ்ட்ராட்டஜிக் ஃபோர்சஸ் கமாண்ட், அணு ஆயுத ஏவுகணையான  'அக்னி V' ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பொதுவாக ஏவுகணைகளை இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெறும். அதன்பிறகே அந்த ஏவுகணை இராணுவத்தில் சேர்க்கப்படும். ஏற்கனவே  'அக்னி V' ஏவுகணை 7 முறை சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அணு ஆயுதங்களைக் கையாளும் ஸ்ட்ராட்டஜிக் ஃபோர்சஸ் கமாண்ட் அந்த ஏவுகணையை சோதித்துள்ளதால், விரைவில் 'அக்னி V' இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திட எரிபொருளில் இயங்கும் மூன்று கட்ட என்ஜின் அமைப்பைக் கொண்ட 'அக்னி V', 5000 கிலோமீட்டர் வரை சென்று, இலக்கை சிறிதும் குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் சீனாவின் வடக்குப்பகுதியைக் கூட தென்னிந்தியாவிலிருந்து தாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்