இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத்துறை தகவல்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்ததாக கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் துணை அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், கனடா வைத்த குற்றச்சாட்டு குறித்து கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரம் குறித்து உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.