உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், "உலகின் 91 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சமூக பரவல் ஏற்பட்டால் டெல்டா பரவலை ஒமிக்ரான் பரவல் மிஞ்சும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, "இது அத்தியாவசியமற்ற பயணங்கள், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம். கொண்டாட்டங்களை குறைத்துக்கொள்வது முக்கியம். கரோனாவுக்கு எதிரான ஆன்டி-வைரஸ் மாத்திரைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். நோய் கண்டறியப்படுவதற்கு முன்பே, இந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று கண்டறிந்துள்ளோம். இந்த நேரத்தில் இந்த மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவியல் ரீதியான தரவுகள் பெரிய அளவில் கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.