இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.
சந்திரயான் -3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கத் தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான்-3
பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர், இந்த நிகழ்வின் நேரலையில் கலந்து கொண்டார். சந்திரயான் - 3 தரையிறக்கப்பட்டது அறிந்து கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை அசைத்து பிரதமர் மோடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 'இந்தியாவின் வருங்கால வளர்ச்சியின் உதயமாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சந்திரயான் - 3 திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என்னுடைய பாராட்டு. இந்தியா தற்பொழுது நிலவில் உள்ளது. சந்திரயான் - 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து. தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது. நிலா... நிலா... ஓடி வா... பாடலை மெய்ப்பித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டு. வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு கோடான கோடி நன்றி'' என தெரிவித்தார்.