சிதம்பரத்திலுள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை மற்றும் ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலை அறக்கட்டளை இணைந்து திருவள்ளுவர் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் மருத்துவர் சு.அருள்மொழி செல்வன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் கடலூர் அரசு மாற்றுத்திறன்( பார்வையற்றோர்) பள்ளி இசை ஆசிரியர் சத்தியநாராயணன் திருமுறை இசையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் மொழியியல் துறை முதல்வர் அரங்க. பாரி கலந்துகொண்டு "இலக்கியத்தில் அறம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி அறம் செய்தல் என்றால் என்ன என மாணவ மாணவிகளுக்கு தெளிவாக புரியும் வகையில் எடுத்துக்கூறினார். இதனைத் தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்று, பரிசுகள் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ஆறுமுகநாவலர் அரசு உதவிபெறும் பள்ளியின் முதுகலை ஆசிரியை சுமதி, அகிலா, சேது சுப்பிரமணியம், பொன்னம்பலம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆறுமுக நாவலர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.
விழாவில் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் சிதம்பரம் பகுதியில் உள்ள மாணவர்கள் 1330 திருக்குறளையும் ஒப்புவித்தால் அவர்களுக்கு மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயராமன் மாணவர்கள் திருக்குறளின் ஏதாவது ஒரு எண், அதிகாரத்தின் எண்ணைக் கூறினால் அதனை உடனே மேலிருந்தும், கீழ் இருந்தும் கூறினார். இது மாணவர்கள் மத்தியில் திருக்குறளை ஒப்புவிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.