Skip to main content

"முழு அமைதியே நமது உறவை மேம்படுத்தும்"  - சீன அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

india chin foreign ministers

 

பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தநிலையில், இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் தஜிகிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில், உறுப்பினராக உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இந்தக் கூட்டத்திற்கு மத்தியில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிலவும் நிலை குறித்தும், இந்திய - சீன உறவு தொடர்பான மற்ற விவகாரங்கள் குறித்தும் விரிவான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்”  என தெரிவித்துள்ளது. 

 

தொடர்ந்து, "இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் படை விலகல் செய்யப்பட்டது மற்ற விவகாரங்களையும் தீர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்தக் குறிக்கோளோடு (விவகாரங்களை தீர்க்க) சீனா நம்முடன் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள பகுதிகளில் விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும், "இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகள்  கடைப்பிடிக்கப்டும் அதேவேளையில், இரு தரப்பும் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லைக்கோடு பகுதியில் நிலவும் விவகாரங்களை விரைவாக தீர்க்க முயலுவது இரு தரப்பு நலனுக்கானது என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எல்லையில் மீண்டும் முழுமையான அமைதியை ஏற்படுத்துவதும், அதனைப் பராமரிப்பதுமே நமது உறவை மேம்படுத்தும்" என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாகவும், இந்திய - சீன மூத்த இராணுவ தளபதிகளுக்கிடையேயான கூட்டத்தை விரைவில் கூட்ட ஒப்புக்கொண்டதாகவும்" தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்