இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக அரசு முனைவதாகக் கூறி பல கருத்துகள், கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் சேவாக்கும் இதற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் வைரலாகி வருகிறது.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில், இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமிதாப் பச்சன், "பாரத் மாதா கீ ஜே" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் எங்கள் உண்மையான பெயர் 'பாரத்'. அதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ-யை வலியுறுத்துகிறேன்" எனத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படி பாரத்; இந்தியா எனும் விவாதம் எழுந்து வரும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு வைரலாகி வருகிறது. அதில், ‘நான் பாரதியனாக இருப்பற்கு பாக்கியம் பெற்றவன்’ என்று இருக்கிறது. பாரதம் பெயர் மாற்றம் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தோனியின் டி.பி. தற்போது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், கிரிக்கெட் வீரர் தோனி தனது இன்ஸ்டாகிராம் டி.பி.-ஐ கடந்த 2022ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் அடையாளமாக மாற்றியிருந்தார் என்பதே நிதர்சனம். இதனைத் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தோனியை பாஜக அரசியலில் ஈடுபடுத்த முயன்றதாக பேச்சுகள் எழுந்தன. ஆனால், தோனி அப்படியான முடிவு எதுவும் எடுக்காமல், இந்திய ராணுவத்தின் விக்டர் படையின் ஒரு பகுதியில் காவலர் மற்றும் போஸ்ட் டியூட்டியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.