இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் ஸ்புட்னிக் V-இன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே ஸ்புட்னிக் V தடுப்பூசி இன்னும் முழு அளவிலான மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில், ஸ்புட்னிக் லைட் எனும் ஒற்றை டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் டாக்டர் ரெட்டி'ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. டாக்டர் ரெட்டி'ஸ் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஸ்புட்னிக் லைட் என்பது ஸ்புட்னிக் V தடுப்பூசியின் ஒற்றை டோஸ் என்பதாலும், ஏற்கனவே ஸ்புட்னிக் V தடுப்பூசியின் ஒற்றை டோஸின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாலும் தனியாக இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியைப் பரிசோதிக்க தேவையில்லை’ என நிபுணர் குழு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி பெற, ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வின் சோதனை தரவுகளைச் சமர்ப்பித்தால் போதும் எனவும் நிபுணர் குழு தெரிவித்ததாக டாக்டர் ரெட்டி'ஸ் கூறியுள்ளது.