Skip to main content

விமானி அபிநந்தனின் மனைவியா இவர்? வைரலாகும் வீடியோ!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

சமூக வலைதளங்களில் அபிநந்தனின் மனைவி பா.ஜ.க. அரசியல்வாதிகள் ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது எனக் குறிப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

dfgdfg

 

இரு தினங்களுக்கு முன்னர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் நிலவிய பதற்றத்தின்போது, இரு நாட்டு போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது இந்தியாவின் மிரேஜ் 2000 ரக விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி அபிநந்தனைக் காணவில்லை என்ற செய்தி பரவியது. அவர் பாகிஸ்தான் ராணுவப்படையிடம் சிக்கியிருப்பதற்கான வீடியோக்கள் வெளியாகின. அதனை இந்திய வெளியுறவுத்துறையும் உறுதிசெய்த நிலையில், தற்போது அவரை அமைதி நல்லெண்ணத்துடன் விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.

 

இதற்கிடையே, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் அபிநந்தனின் மனைவி பா.ஜ.க. அரசியல்வாதிகள் ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது எனக் குறிப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தான் ஒரு ராணுவ அதிகாரியின் மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண், எல்லா இராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் சார்பாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன். சக இந்தியர்கள்.. குறிப்பாக அரசியல் தலைவர்கள்.. (அழுத்தமாக சொல்கிறார்) நம் இராணுவ வீரர்களின் தியாகங்களை தயவுசெய்து அரசியலாக்காதீர்கள். இராணுவ வீரராக இருப்பது மிகவும் கடினம். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் அபிநந்தனின் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி, வேதனையை கொஞ்சமாவது நினைத்துப் பாருங்கள்.


எல்லையில் பதற்றம் சூழ்ந்திருக்கும் வேளையில் உங்கள் பிரச்சாரப் பேரணிகளை நிறுத்தி வையுங்கள். அங்கே உங்களது அரசியலுக்காக இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அரசியல் செய்வதற்கு இங்கே போதுமான நேரம் இருக்கும்போது, இராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள். இது எல்லா அரசியல் தலைவர்களுக்கும், குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களுக்கு நான் முன்வைக்கும் பணிவான வேண்டுகோள் என பேசியிருக்கிறார்.


இந்த வீடியோவில் இருப்பவர் அபிநந்தனின் மனைவி என்று ஒருபுறம் செய்தி பரவி வரும்நிலையில், அது பொய் என்கிற தகவல் இப்போது உறுதியாகியுள்ளது. அபிநந்தனின் மனைவியும், முன்னாள் இந்திய விமானப்படை விமானியுமான தான்வி மர்வா பற்றிய செய்திக்குறிப்புகள் அதை உறுதிப்படுத்துகின்றன.


இந்த வீடியோவை காங்கிரஸ் மாணவரணியைச் சேர்ந்த தினேஷ் சிங்தா என்பவர் தனது முகநூல் பக்கத்தில், அபிநந்தனின் மனைவி பேசுகிறார் எனப் பதிவிட்டிருக்கிறார். அதேபோல், காங்கிரஸ் அமைப்பின் யுவதேஷ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பா.ஜ.க.வினர் இராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள் என்று மட்டும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பாரத் பாண்டியா, புல்வாமா தாக்குதலை முன்னிறுத்தி வாக்குகளைச் சேகரிக்குமாறு கட்டளையிட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல், கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, விமானப்படையின் பதில் தாக்குதலைச் சொல்லியே 22 எம்.பி. தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பேசியதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்