முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சமையலரின் மகன், தனது தாய் கடத்தப்பட்டிருப்பதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில், எச்.டி ரேவண்ணா மீதும், அவரது உறவினர் சதீஷ் பாவண்ணா மீதும் ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, தன் மீது போடப்பட்டுள்ள ஆள் கடத்தல், ஆபாச வீடியோ வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.டி.ரேவண்ணா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு பெங்களூர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, எச்.டி.ரேவண்ணாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டார். முன்னதாக கடத்தி வைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் பாதிக்கப்பட்ட சமையலரை போலீசார் மீட்டனர்.
அதே சமயம் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் தேவராஜ் கவுடா பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் தேவராஜ் கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் ஆபாச படம் தொடர்பான பென் டிரைவை காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்திருப்பார் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பென் டிரைவை பாஜக மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவிடம் வழங்கியதாகவும் அவரைத்தவிர வேறு யாரிடமும் அந்த வீடியோவை வழங்கவில்லை என்று டிரைவர் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து ஏப்ரல் 1 ஆம் தேதியே வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இந்தத் தகவல் தற்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜ் கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தேவராஜ் கவுடா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகவும், 2023 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஹொளேநரசிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எச்.டி. ரேவண்ணாவிடம் தோற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியே வர காரணமாக இருந்தவர் தேவராஜ் கவுடா என்பதும் கவனிக்கத்தக்கது.