உத்தரப் பிரதேச மாநிலம், கெளசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷைலேஷ் குமார் (32). இவருக்கு சவிதா என்ற மனைவி இருக்கிறார். இந்த நிலையில், வைலேஷை பார்ப்பதற்காக அவருடைய சகோதரர் அகிலேஷ், ஷைலேஷுடைய வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஷைலேஷ் மயக்கமடைந்த நிலையில், கீழே படுத்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அகிலேஷ், உடனடியாக ஷைலேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில், ஷைலேஷ் சாப்பிட்ட உணவில் தான் தான் விஷம் கலந்து கொடுத்ததாக ஷைலேஷின் மனைவி சவிதா வீடியோ மூலம் அகிலேஷுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து அகிலேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் தலைமறைவாகி இருந்த சவிதாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த 20ஆம் தேதி ஷைலேஷ் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய சவிதா உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஷைலேஷ் காலை முதல் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்துள்ளார். இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, உண்ணாவிரதத்தை முடித்த போது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை எழுந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சவிதா, ஷைலேஷுக்கு கொடுத்த உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இது தெரியாமல் சாப்பிட்டு கொண்டிருந்த ஷைலேஷிடம், பக்கத்து வீட்டுக்குச் செல்வதாகக் கூறி அங்கிருந்து சவிதா தப்பிச் சென்றுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சவிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் நீண்ட ஆயுளுக்காக காலையில் விரதம் இருந்த மனைவி, மாலையில் கணவனையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.